Search This Blog

Wednesday, September 24, 2014

Omapodi

#ஓமப்பொடி : ஓமப்பொடி தீபாவளி பலகாரங்களில் ஒன்று ஆகும். #மிக்ஸர் செய்யும் போதும் அதில் ஓமப்பொடி கலக்கப்படும்.
ஓமப்பொடி சாப்பிட வேண்டும் என்ற அவா சென்ற வாரம் தலை தூக்கியது. கடலை மாவு மற்றும் ஓமம் சேர்த்து மாவு பிசைந்து இடியாப்பம் போல பிழிந்து எண்ணெயில் பொரித்தேடுப்பதே ஓமப்பொடி ஆகும். கடைகளில் விற்கப்படும் ஓமப்பொடியில்  கடலை மாவு வாசனையும் பொரிக்கப்படும் எண்ணெய் வாசனையுமே இருக்கின்றது. அதிலும் இங்கு ராய்ப்பூரில் கிடைப்பவை சாட் மசாலா வாசனையே தூக்கலாக உள்ளது.
ஓமம் வாசனைக்காகவும் அதன் ருசிக்காகவுமே இந்த பலகாரம் விரும்பப்படுகிறது.
அதனால் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம் என முடிவெடுத்து காரியத்திலும் இறங்கி வெற்றியும் கண்டு விட்டேன்.
எவ்வாறு என பார்ப்போமா?!!


தேவையான பொருட்கள் :
1 1/4 கப்                               கடலை மாவு
1/4 கப்                                  அரிசி மாவு
1 Tbsp                                    ஓமம்
1/4 Tsp                                   சிகப்பு மிளகாய் தூள்  [ adjust ]
2 pinches                                மஞ்சத்தூள்
1/2 Tsp                                   உப்பு  [ adjust ]
11/2 cup                                 எண்ணெய் பொரிப்பதற்கு

முறுக்கு  பிழியும் இயந்திரம் இடியாப்ப அச்சுடன்.


செய்முறை :
ஓமத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
குறிப்பிட்டுள்ள மணி நேரத்திற்கு பிறகு மிக்சியில் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.
அரைக்கப்படாத ஓமம் மற்றும் சிறு துகள்களை அகற்றுவதற்காக  டீ வடிகட்டியில் வடிகட்டிகொள்ளவும். இல்லாவிடின் இடியாப்ப அச்சின் ஓட்டைகளை அடைத்துக்கொள்ளும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவு, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.


ஓம கரைசலை ஊற்றி மேலும் தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


முறுக்கு பிழியும் இயந்திரத்தின் உள்ளே மாவை வைத்து தயார் செய்யவும்.

ஒரு தட்டின் மேல் எண்ணெய் உறிஞ்சும் தாளை பரப்பி தயாராக வைக்கவும்.

எண்ணெய் சூடாகி விட்டதா என அறிய சிறு உருண்டை மாவை எண்ணையில் போடவும். பொறிந்துகொண்டே மேலேழும்பினால் எண்ணெய் சூடாகி விட்டது என அர்த்தம்.

மாவுடன் கூடிய முறுக்கு இயந்திரத்தை சூடான எண்ணெயின் மேலே பிடித்துக் கொண்டு ஒரு வட்டமாக பிழிந்து விடவும்.


முறுக்கு இயந்திரத்தை கீழே வைத்து விட்டு சாரணியால் பிரட்டி விட்டு பொரிவது அடங்கியவுடன் எடுத்து விடவும்.


தயாராக உள்ள தட்டின் மீது எடுத்து வைக்கவும்.

அடுத்த ஈட்டிற்காக மறுபடியும் மேலே கூறியவாறு பிழிந்து பொரித்தெடுக்கவும்.

ஒவ்வொரு முறை பிழியும் போதும் எண்ணெயின் சூடு சரியாக  இருக்கிறதா என பார்த்துக்கொள்ளவும்.
எண்ணெயின் சூட்டை தேவைக்கு ஏற்றவாறு கூட்டி குறைப்பது அவசியம்.
ஒமப்பொடியின் இழைகள் மிக மெல்லியதாக இருப்பதால் மிக விரைவில் பொரிந்து விடும்.

ஒரு மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைக்கவும்.


இந்த அளவு மாவில் 6 முதல் 7 ஈடு பொரித்தெடுக்க வேண்டியதாய் இருக்கும்.


காபி மற்றும் டீயுடன் மாலையில் சுவைக்க மிக மிக ஏற்ற பலகாரமாகும்.


No comments:

Post a Comment