Search This Blog

Thursday, March 20, 2014

Arisi Sundal

#அரிசிசுண்டல் : #சுண்டல் என்றதும் உங்களுக்கு கடற்கரை ஞாபகம் வருகிறதா? இது அதுவல்ல!.... இது அரிசி மற்றும் பச்சை பருப்பு கொண்டு பாரம்பரியமாக செய்யப் படும் ஒரு உணவு வகையாகும்.அரிசியும் பருப்பும் உபயோகித்துதானே பொங்கல் செய்யப்படுகிறது. பிறகு இதிலென்ன விசேஷம் என தோன்றுகிறதா??!! பொருட்கள் என்னமோ ஒன்றுதான். ஆனால் செய்முறையில் சிறிது வித்தியாசம். இந்த சிறு வித்தியாசம்  சுவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது.

பொங்கல் போல ஒன்று சேர்ந்து கொழகொழவென இல்லாமல் உதிர் உதிராக இருக்கும். அதனால் இதனை பழங்கால Fried Rice  என கூறலாம்.
அரிசி உப்புமா வை போலவும் இதன் ருசி இருக்காது. பருப்பின் வாசனையுடன் மிக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

மேலும் இதன் சுவை அரிசியின் வகையை ஒத்ததாகவே இருக்கும்.
உதாரணமாக பாசுமதி அரிசியில் செய்யும் போது கிடைக்கும் சுவையும் பொன்னி, சோனாமசூரி போன்ற வகை பச்சரிசியுடன் செய்யும் போது அமையும் சுவையும் சிறிது வித்தியாசமாகவே இருக்கும்.
இனி எப்படி செய்யலாம் என காண்போம்.

அரிசி சுண்டல்

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                          பச்சரிசி
1/4 கப்                                          பச்சை பருப்பு [பாசி பருப்பு, சிறு பருப்பு ]
1 பெரிய அளவு                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
10                                                  கறுவேப்பிலை
1 சிறு துண்டு                          இஞ்சி [ விருப்பப்பட்டால் ]

தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 அ 4                                         சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/8 Tsp                                          பெருங்காயம்
2 Tsp                                           நல்லெண்ணெய்

அலங்கரிக்க :
தேங்காய் துருவல்           தங்களுடைய விருப்பம் போல

செய்முறை :
வாணலியை  சிறிய தீயில் வைத்து முதலில் அரிசியை வெறுமனே வறுக்கவும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அரிசி அதனுடைய இயற்கையான நிறம் மாறி நல்ல வெள்ளை நிறமாக மாறும்.
அந்த தருணத்தில் ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ மாற்றி விடவும்.

இப்போது அதே வாணலியில் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


பொன்னிறமாக வறு பட்டதும் அரிசியுடன் சேர்த்து விடவும்.
வறுத்த அரிசி பருப்பை தனியே வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின் மிளகாயை கிள்ளி  போட்டு கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.


பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம், கறுவேப்பிலை, மற்றும்   இஞ்சியை சேர்த்து  சிறிது வதக்கிய உடனேயே வெங்காயத்தை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். வெங்காயம்  ரோஸ் நிறம் மாறினால் போதும்.
2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கலக்கி விட்டு தீயை அதிகப் படுத்தி கொதிக்க விடவும்.


இந்த நேரத்தில் அரிசியையும் பருப்பையும் இரு முறை தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும்.
 கொதிக்க  ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து கலக்கி தீயை சிறிதாக்கி மூடி போட்டு வேக விடவும்.


நடுவில் மூடியை திறந்து கரண்டியால் கலக்கி விடவும். கிண்டும் போது கவனம் தேவை. அரிசியோ பருப்போ நசுக்கிவிடாமல் கவனமாக கிளற வேண்டும்.


வேக சுமார் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடி வைத்திருக்கவும்.


பின்னர் எடுத்து பரிமாறலாம்.

ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் சுண்டலை வைத்து தேங்காய் துருவலை தூவி தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.


சுண்டலின் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் சர்க்கரை தூவி சாப்பிட்டால் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
செய்து சுவைக்கவும்!!!

குறிப்பு :
சிகப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் கொண்டும் செய்யலாம்.







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
வரகரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்






No comments:

Post a Comment