Search This Blog

Monday, February 24, 2014

Paneer Masala Curry

#பன்னீர்மசாலாகறி : எல்லா வகையான இரவு விருந்துகளிலும் இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் கட்டாயமாக இந்த கறி இடம் பெற்றிருக்கும். ஆனால் எனக்கு இங்கு செய்யப்படும் #பன்னீர் மசாலா கறியின் சுவை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது. அதனால் என்னுடைய முறைப்படி செய்தேன்.
மிக மிக அருமையாக இருந்தது. அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பன்னீர் மசாலா கறி

தேவையான பொருட்கள் :
150 gm                                      பன்னீர், ஒரே மாதிரி சிறிய சதுரங்களாக வெட்டவும்
1 பெரிய அளவு                     வெங்காயம், பொடியாக அரியவும்
3 நடுத்தர அளவு                   தக்காளி, பொடியாக அரியவும்
10                                             கருவேப்பிலை
1/4 கப்                                      கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.

அரைக்க :
3  Tsp                                       தேங்காய் துருவல்
1/2 TSp                                    கசகசா
3                                              முந்திரி பருப்பு
1 Tsp                                        சீரகம்
2 பற்கள்                                  பூண்டு [ பிடிக்குமானால் ]

 தாளிக்க :
1/2 Tsp                                     சீரகம்
3 Tsp                                        எண்ணெய்

சேர்க்க வேண்டிய பொடிகள் :
1 Tsp                                       மிளகாய் தூள்
1/2 Tsp                                    சீரகத்தூள்
2 சிட்டிகை                            மஞ்சத்தூள்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றையும் கழுவி அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின் சீரகத்தை வெடிக்கவிட்டு மிளகாய்த்தூள் சேர்த்தவுடனேயே கொத்தமல்லி தழை சிறிது மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
அரை நிமிடம் வதக்கியபின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னேர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.


பச்சை வாசனை போனபின் பன்னீர் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


2 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
சிறிய தீயில் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பன்னீர் மசாலா கறி

பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற கறியாகும்.
சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



மற்ற குருமா வகைகள் செய்து பார்க்க
காலிப்ளவர் தக்காளி குருமா காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி பஜ்ஜி மிளகாய் கிரேவி

No comments:

Post a Comment