Search This Blog

Thursday, December 12, 2013

Manathakkali Keerai Paal Saru

#மணத்தக்காளிகீரைபால்சாறு : #மணத்தக்காளிகீரை வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும். என் மகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் வாய்புண் இருந்தால் உடனே மணத்தக்காளி கீரை செய்யச் சொல்வாள். ஒரு நாள் சாப்பிட்டாலே புண் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.
மணத்தக்காளி கீரை உபயோகித்து செய்யும் இந்த உணவு வகையை பால் சாறு என நாங்கள் அழைப்போம். பலர் இதனை #கழனிசாறு எனவும் சிலர்  தண்ணிசாறு எனவும் அழைப்பார்கள்.
அரிசி களைந்த தண்ணீர் கொண்டு செய்வதால் கழனி சாறு என அழைக்கப்படுகிறது. அரிசி களைந்த தண்ணீர் வைட்டமின் B நிறைந்தது. வைட்டமின் B வாய்புண் போன்றவை வராமல் தடுக்க உதவும்.
ஆனால் இப்போது அரிசி களைந்த தண்ணீரை உபயோகப்படுத்த ஐயமாக உள்ளது. ஏனெனில் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால்!!

நான் இப்போது வசிக்கும் ராய்ப்பூரில் விதவிதமான கீரைகள் கிடைக்கின்றன. ஆனால் இந்த மணத்தக்காளி மட்டும் கிடைப்பதில்லை. ஊரிலிருந்து செடி கொண்டு வந்து நட்டதில் சில செடிகள் வளர்ந்துள்ளன. அதிலிருந்து பறித்த கீரைதான் கீழே படத்தில் உள்ளது.
மணத்தக்காளி கீரை, தேங்காய் துறுவல், சிறிது சீரகம் மற்றும் வெங்காயம் கொண்டு மிகவும் எளிதாக ஆனால் மிகவும் சத்துமிக்க ஒரு உணவு வகையை செய்து விடலாம்.
இனி எப்படி மணத்தக்காளி கீரை பால் சாறு செய்வது என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :

2 கைப்பிடி                                  மணத்தக்காளி கீரை
3 அ 4 Tbsp                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                             உப்பு

தாளிக்க :
1 Tsp                                              சீரகம்
3 Tsp                                             பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்

செய்முறை :
கீரையை நன்றாக கழுவவும்.
கழுவிய கீரையை காய் வெட்டும் பலகையின் மேல் எடுத்து வைக்கவும்.
பிறகு கத்தியினால் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு கீரையை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
அதிகமாக வேகவிடக் கூடாது.
பச்சை நிறம் மாறாமல் வேக வைப்பது அவசியம்.
அடுப்பை அணைத்து விடவும்.
விருப்பப்பட்டால் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

வாணலியில் 1/2 Tsp நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி சீரகத்தை வெடிக்க விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கீரையுடன் சேர்க்கவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு ஒரு சுற்று ஓட விடவும்.
இலேசான சுடு தண்ணீர் ஊற்றி மறுபடியும் ஒரு சுற்று மிக்சியை ஓட விடவும்.
தேங்காய் பாலை பிழிந்து எடுக்கவும்.
வேகவைத்த கீரையுடன் சேர்க்கவும்.
இரண்டாவது முறை பிழிந்தெடுத்த தேங்காய் துருவலை சிறிது சூடான தண்ணீருடன் மிக்ஸியில் ஒரு முறை சுற்ற விடவும்.
பாலை பிழிந்து கீரையுடன் சேர்க்கவும்.
மூன்றாம் முறையும் அதே போல பால் எடுக்கவும்.
கீரையுடன் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும். தேங்காய் பால் சேர்த்த பிறகு கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மணத்தக்காளி கீரை பால் சாறு தயார்.

தேங்காய் பால் சீக்கிரம் கெ ட்டு போய்விடும். ஆதலால் கீரையை முன்பே வேகவைத்து தயாராக வைக்கவும்.
தேங்காய் பாலை சாப்பிடுவதற்கு முன் தயார் செய்து கீரையுடன் சேர்ப்பது நல்லது.


சூடான சாதத்தில் எவ்வளவு விருப்பமோ அவ்வளவு கீரையை முதலில்  சேர்த்து அழுத்தி பிசைந்து பிறகு நிறைய பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சாம்பார் அல்லது குழம்புடன் குளம் கட்டி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

குக்கரில் செய்யும் முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர், உப்பு மற்றும் கழுவி நறுக்கிய மனத்தக்காளி கீரை ஆகியவற்றை போட்டு மூடி வெயிட் வைத்து ஒரு விசில் வரும்வரை வேக வைக்கவும்.
வெயிட்டை எடுத்து உடனே ஆவியை வெளியேற்றவும்.
அல்லது தண்ணீர் குழாயின் கீழே வைத்து குக்கரின் மீது தண்ணீரை திறந்து விட்டால் ஆவி அடங்கி விடும்.
வெந்த கீரையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

சீரகம் வெங்காயம் தாளித்து கொட்டவும்.
தேங்காய் பால் எடுத்து சாப்பிடுவதற்கு முன் கீரையுடன் சேர்த்து பரிமாறவும்.







சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க

பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரைமசியல்
அரைக்கீரைமசியல்
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment